மாணாக்கர்மாண்புற-வாழ்வியல்-வழிமுறைகள், புத்தக வெளியீடு


அருள் முனைவர்.ஜோசப் லூர்து ராஜா அவர்களின் 21 வது புத்தகமான ‘மாணாக்கர் மாண்புற வாழ்வியல் முறைகள்’ என்ற புத்தகத்தினை அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு கல்வி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அழகாக குறிப்பிட்டு கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணருகின்ற விதத்திலே கல்வி என்பது அறிவு, திறன் மற்றும் நேர்மறை ஒழுக்கம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்கின்ற கருத்தை வலியுறுத்தி இருக்கின்றது இந்த புத்தகம்.அருள் முனைவர்.ஜோசப் லூர்து ராஜா அவர்களின் 21 வது புத்தகமான ‘மாணாக்கர் மாண்புற வாழ்வியல் முறைகள்’

மேலும் மாணாக்கர் பெற்றிருக்கக் கூடிய 18 பண்பு நலன்களைக் குறிப்பிட்டு அறிவு  சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த,  உளவியல் சார்ந்த மற்றும் திறமை சார்ந்த எனப் பல கூறுகளையும் உள்ளடக்கி தனிப்பட்ட வாழ்விற்கும் கூட்டு வாழ்விற்கும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு அம்சமாக இருக்கிறது.

நவ ரத்தினங்களால் அழகுபடுத்த 9 இயல்களால் அணி செய்யப்பட்டு மாணாக்கர் சந்திக்கும் சவால்களும் அவற்றை தீர்ப்பதற்கான வழிகளையும் மிக அழகாக கூறியிருக்கின்றார் ஆசிரியர். சமூக, பொருளாதார, குடும்ப, பள்ளி மற்றும் கல்வியில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் மன அழுத்தங்களினால் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான வழிகளை தெளிவாக விளக்கிக் காட்டியும்  மாணாக்கர்  தேர்வுக்கு எப்படி தயாரிக்க வேண்டும்  வேண்டும், எப்படி மனதில் பதியும் படியாக மனனம் செய்ய வேண்டும் என்கின்ற உளவியல் ரீதியான வழிமுறைகளையும் விளக்கி கூறியிருப்பது, மாணாக்கர்  பயம் நீங்கி மன உறுதியுடன் வாழும் வழிமுறைகளைக் காட்டுவதாக அமைகின்றது.

“முடியாது என்பது மூடத்தனம்

முடியுமா என்பது அவநம்பிக்கை

 முடியும் என்பது தன்னம்பிக்கை

 என்னால் முடியும் என்பது ஆணவம்”

என்கின்ற மேற்கோள் கவிதையைச் சுட்டிக்காட்டி மாணாக்கர்  அவநம்பிக்கை மற்றும் ஆணவம் இன்றி தன்னம்பிக்கையோடு செயல்படத் தூண்டி இருப்பது பாராட்டுதற்குரியதாக அமைகின்றது.

ஒன்பதாவது இயலில் ‘மாணாக்கரில் உதயமான தலைவர்கள்’ என்ற தலைப்பில் 55 மாணாக்கர் தலைவர்களுடைய வாழ்க்கை வரலாறை  மேற்கோள் காட்டி இருப்பது தானும் அந்த வரிசையில் இடம்பெற வேண்டும் என்கின்ற ஒரு உறுதியினை மாணாக்கருக்கு  ஏற்படுத்துகிறது.

முன்னுரை நீங்களாக 89 பக்கங்களைக் கொண்ட இந்தச்  சிறிய புத்தகம் உண்மையிலேயே ஒரு பெரிய பெட்டகமாக கருதப்படுகிறது. ஔவையார் திருக்குறளின் சிறப்பைக் குறித்து கூறுகையில் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்’ என்று சொல்லுவது போல சிறிய இந்த புத்தகம் பெரிய கடல்.

மாணாக்கராகவே  மாறி மாணாக்கருடைய உணர்வை  மிக அழகிய வடிவில் செதுக்கிய சிற்பம் இந்த புத்தகம்.  இது வெறும் காகிதத்தால் எழுதப்பட்ட புத்தகம் அன்று; மாணாக்கர் வாழ்வில் மாண்புற அவர்கள் தன்னகத்தை கொண்டிருக்கக் கூடிய ஒரு பொக்கிசம்.

தமிழ்ப் பிள்ளையாக பிறந்த இந்த புத்தகம் அறிவு, திறன்  மற்றும் நேர்மறையான ஒழுக்கத்தோடு மாணாக்கராக  தவழ வேண்டும் என்பது எனது அவா. எனவே ஒவ்வொரு மாணவரின் கையிலும் இந்த புத்தகம் இருப்பது அவர்கள் வாழ்வில் முன்னேற வழிகாட்டும் நூலாகவும் எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து பாதுகாக்கும் கேடயமாகவும் இருக்கும்.

புத்தகம் உங்கள் கையில் வரட்டும்!மாணாக்கர் மாண்பு உயரட்டும்!

அன்புடன்

அருள் முனைவர். அருள் பிரபாகர்