துளிர்க்கும் தளிர்


“வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இயேசுவிடம் கேட்டான் இளைஞன் ஒருவன். இக்கேள்வி இளைய சமுதாயம் தன்னுள் கொண்டிருக்கும் ‘நிறைவாழ்வு நோக்கிய’ தாகத்தைக் காட்டுகின்றது. இளையோர் உள்ள – உடல் சக்திகளைக் கொண்டவர்கள். துணிச்சல் மிக்கவர்கள். இளங்கன்று பயமறியாது என்று சொல்வதுபோல வேகம் மிக்கவர்கள் உயிரோட்டமுள்ளவர்கள்; எதைச் செய்ய நினைத்தாலும் வலுவாக, வேகமாகச் செய்து முடிப்பவர்கள். ஆக வாழ்வு பெற வேண்டும் என்ற ஏக்கமும் அஞ்சா நெஞ்சமும் புதுமை படைக்கும் ஆற்றலும் நீதிக்காகப் போராடும் உள்ளமும் கொண்டவர்கள் இளைஞர்கள். சக்தி நிரம்பிய இளைஞர்! எங்குச் செல்ல வேண்டும்? எப்படிச் செல்ல வேண்டும்? ஏன் செல்ல வேண்டும்? எப்பொழுது செல்ல வேண்டும்? என்பதைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் இளமை சக்தியானது சிதைவுற்று ஆற்றலில்லாமல் போய்விடுகிறது. எனவே இயேசுவின் வழியில் (மத்19:16-24) எவ்வாறு இளையோரை இறையாட்சிக்காக ஆற்றல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். “அறிவுரைகளைப் படிப்பதில், கேட்பதில் காலத்தைக் கடத்தாமல் அவற்றைச் செயல்படுத்துவதில் கவனத்தைத் திருப்புங்கள். அதுவே அறிவுத் தெளிவுபெற எளிய வழி” என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்ளின்.

இளையேரின் அடிப்படை :    இன்றைய காலகட்டத்தில் இறையாட்சி மையக்கொள்கை இளைஞர் பணியின் அடிப்படையாக உள்ளது. “இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதன்று, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தவராகவும் மக்களின் மதிப்புக்கு உரியோராகவும் இருப்பர்” (உரோ 14:17-18). நிறுவனத் திருச்சபை மையத்திலிருந்து இறையாட்சி மையத்திற்கு இளைஞர் பணி மாற வேண்டும். இளைஞர் ஒவ்வொருவரும் இறையாட்சியின் பிரதிநிதி என்பதைவிட இறையாட்சி குடும்பத்தை வளர்க்கும் பொறுப்புடையவர்கள் என்று எண்ணல் வேண்டும். வெறும் செயலாகப் பார்க்காமல் உருவாக்கப் பணியாகப் பார்த்தல் வேண்டும். அனைத்திற்கும் மேலாக இளையோர் பணி என்பது ஒரு கொடையும் அழைப்பும் என்பதை உணர்தல் வேண்டும். இளையோர் பணியின் அமைப்பு “இயங்கு ஆற்றல்” முறையைக் கொண்டதாக அமைந்து இயக்க அமைப்பைக் கொண்டு ஆற்றல் படுத்துவது மிகச் சிறப்பாகும்..

இளையோரின் செயல்பாங்கு: இளையோரை இறையாட்சிக்காக ஆற்றல்படுத்துவதற்கு நிறுவனத் திருச்சபையிலிருந்து ஒருங்கிணைந்த திருப்பயணக் குழு என்ற உணர்வும், அத்தகைய உணர்வை வெளிப்படுத்தும் செயல் முறைகளும் வேண்டும். பாம்பைப் போல விவேகமும், புறாவைப் போலக் கபடற்ற செயல்பாங்கும் வேண்டும். ஜேம்ஸ் ஆலன் சொல்வார் “செயல் உண்மை, செயல் நேர்மை என்னும் இரு மகத்தான விதியினைப் பின்பற்றுகிறவன் சரியான செயல் என்னும் எச்சரிக்கையான பாதையில் அழைத்துச் செல்லப்படுகிறான். இதனால் அவனை ஏமாற்றவோ, அவன் ஏமாறவோ வாய்ப்பே இல்லை”. எனவே இளையோரை இறையாட்சிக்காக ஆற்றல்படுத்த தேவையான மனப்பான்மைகள்: 1. தியாகத்தின் வழியாக ஆற்றல், 2. துன்பத்தின் வழியாகப் படைப்பாற்றல், 3. இறை ஒன்றிப்பின் வழியாக அமைதி, 4. கடந்து செல்வதன் வழியாகச் சுதந்திரம், 5. சேவையின் வழியாக மகிழ்ச்சி, 6. நல்லிணக்க வாழ்வின் வழியாக முழு நலம், 7. உறவின் செழுமையின் வழியாக வளமை, 8. ஒருமித்த மனதிற்கான முயற்சியின்; வழியாக வளர்ச்சி.எனவே இறையாட்சியை மையமாக வைத்து அதன் பண்புகளையும், மதிப்பீடுகளையும் வாழவும், பிறரை வாழ வைக்கவும் இளைஞர் முன்வர, இளைஞரில், இளைஞரால் இறையாட்சியை வளர்த்தெடுக்க இளைஞரின் வாழ்வு ஒளிமயமாகத் திகழ உதவுவது இந்நூல்