ஆன்மிகவியல்


ஆன்மிகத்தின் மூலச் சொல்லின் பொருள் ‘ஆவியாரில் இருத்தல்” என்பதாகும். ஆன்மிகம் என்பது ஒருவர் கடவுளோடும், தன் ஆன்மாவோடும் உடலோடும் இணைந்து இருக்கின்ற நிலை. தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகின்ற ஒரு நிலை. ஆன்மிகம் என்பது அறிவூட்டுவது, ஆற்றல்படுத்தி விடுதலை அளிப்பது, ஆற்றுப்படுத்துவது. ஆன்மிகம் என்பது அகலேற்றுவது என்றும் அழைக்கப்படும். அதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள ஒளியைத் தூண்டுதலே அகலேற்றுவதாகும். நானே உலகிற்கு ஒளி என்றார் இயேசு (யோவான் 8:12). அந்த ஒளி வாழ்வாக இருந்தது (யோவான் 1:4).

இந்நூலில் ஆன்மிகத்தின் பொருள் விளக்கம், அவற்றின் வகைகள், புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னியின் நற்கருணை ஆன்மிகம், மரிய அன்னை ஆன்மிகம், ஒப்புரவு ஆன்மிகம், மற்றும் அவரின் அருள் பணி வாழ்வின் அணுகுமுறைகள் ஆகியவை விளக்கம் பெறுகின்றன.

இயல் ஒன்றில் ஆன்மிகத்தின் மூலமொழிச் சொல்லின் பொருள் விளக்கத்திலிருந்து தொடங்கி இன்றையக் காலக்கட்டத்தின் விளக்கம் வரை சிறப்பாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். இயல் இரண்டில் விவிலிய பின்னணியில் ஆன்மிகத்திற்கானப் பொருள் விளக்கம் பெறுகிறது. இயல் மூன்றில் ஆன்மிகத்தின் பல வகைகளான ஆசிர்வாதப்பர் (பெனடிக்டியன்) ஆன்மிகம், கார்மெலைட் ஆன்மிகம், இக்னேசியன் ஆன்மிகம், டொமினிக்கன் ஆன்மிகம், பிரான்சிஸ்கன் ஆன்மிகம், மான்ட்ஃபோர்ட் ஆன்மிகம், மரியின் ஊழியர் சபை மற்றும் கிளரீசின் சபை இவை போன்று இன்னும் பல ஆன்மிக வகைகள் பற்றி மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கப்படுகிறது.

மேலும் மறைமாவட்ட ஆன்மிகம் பற்றி விளக்குகிறபோது இயல் 4, 5, 6, 7 & 8 ஆகியவற்றில் அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய காணப்பட்ட ஆன்மிகங்களான நற்கருணை மைய ஆன்மிகம், மரிய அன்னை மைய ஆன்மிகம், வியான்னியிடம் ஒப்புரவு அருளடையாள மைய ஆன்மிகம் பற்றிய கருத்துகளை விளக்குவதின் வழியாக மறைமாவட்ட அருள்பணியாளர்களின் ஆன்மிகம் பற்றிய உண்மைகளைப் புனிதரின் வாழ்விலிருந்து மிக அருமையாக ஆசிரியர் விளக்கியுள்ளார். மரிய வியான்னியின் அருள்பணி அணுகுமுறைகள் என்ற இயலில் ஒரு பங்குப் பணியாளருக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவு நிலைகளைத் தன் அனுபவங்கள் வாயிலாகவும் வடித்துள்ளார்.

புனித மரிய வியான்னியின் ஆன்மிகமும், வாழ்வும், பணியும் பற்றி சிந்திக்க, வாழ்வாக்க முயற்சித்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். இவர் சிவகங்கை முன்னாள் முதன்மைக் குருவும் கிறிஸ்து இல்ல ஆன்மிகக் குருமடத்தின் இந்நாள் கல்வித் துறைத் தலைவருமான அருள் முனைவர் அ.ஜோசப் லூர்து ராஜா. அவரின் எழுத்துப் பணியும் ஆசிரியப் பணியும் மற்றும் குரு மாணக்கர் உருவாக்கப் பணியும் சிறக்கவும் தொடர்ந்து இறையருள் அவரை நிறைக்கவும் செபிக்கிறேன், வாழ்த்துகிறேன். ஆன்மிகத்தில் அனைவரும் வளர உதவும் இந்நூலை அனைவரும் வாங்கிப் பயன் பெற்று ஆன்மிகத்தில் வளர விழைகிறேன்.