தளிர்க்கும் தணல்


இந்தியாவின் மக்கள் தொகையில் 54 சதவீதத்திற்கு மேல் இளையோர் உள்ளனர். இளையோர் சக்தி மாபெரும் சக்தி. இளையோர் இணைந்தால் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொணர இயலும். இதனைக் எண்பிப்பதின் அடையாளமே மெரினா கடற்கரையில் இந்த ஆண்டு கூடிய இளைஞர் கூட்டம். அக்கூட்டம் சக்தியாக உருமாறி தமிழக பண்பாடாகிய ‘மஞ்சுவிரட்டு’ விளையாட்டிற்குத் தீர்வு கண்டது. ஆக இளையோர் சக்தி படைத்தவர்கள், ஆற்றல் கொண்டவர்கள், மாற்றத்திற்கான வல்லமையைத் தன்னுள் கொண்டவர்கள்.

இத்தகைய இளையோர்களை இறையாட்சிக்காக ஆற்றல் படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம். இறையாட்சி என்பது நாம் உண்கின்ற உணவிலும் நாம் குடிக்கின்ற பானத்திலும் அடங்கியுள்ளது அல்ல மாறாக தூய ஆவி அருளும் நீதி, உண்மை, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று பவுலடியார் விளக்கம் கொடுக்கின்றார் (உரோ 14:17-18). இத்தகைய இறையாட்சியை வளர்த்தெடுப்பதற்கு இளையோர்கள் ஆற்றல் படுத்தப்பட வேண்டும். ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஆற்றலைக் கொடுப்பவர் யார்? எண்ணத்தில் ஆற்றல், எழுத்தில் ஆற்றல், உடலில் ஆற்றல், உள்ளத்தில் ஆற்றல், உணர்வில் ஆற்றல் உள்ளன. இளையோரை இறையாட்சிக்காக ஆற்றல் படுத்துவதற்கு நமக்கு முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக, சான்றாக பலர் உள்ளனர். அதில் முதல்வராக நிகரற்றவராக விளங்குபவர் ‘நாசரேத்தூர் இளைஞன் இயேசு’ என்று சொன்னால் மிகையாகாது.

இளைஞன் இயேசு தன் பணி வாழ்வின் தொடக்கத்திலேயே மனம்மாறி இறையாட்சியை வளர்த்தெடுக்க அழைப்பு விடுகிறார் (மாற் 1:14-15). தன் பணியின் இலக்கை இலக்கு மக்களை இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தை செபக் கூட்டத்தில் அறிக்கையிடுகிறார்(லூக் 4:18-24). நயீன் பட்டணத்தில் வாழ்ந்த ஏழைக் கைம்பெண்ணுக்கு இருந்த ஒரே ஒரு மகன் இறந்துவிட்டான். இயேசு பார்க்கும்பொழுது பரிவு கொண்டு பாடையை தொட்டு நிறுத்தி இளைஞனின் கையைப் பிடித்து ‘இளைஞனே நான் உனக்குச் சொல்லுகிறேன் எழுந்திரு’ என்கிறார். இறந்த அந்த இளைஞனும் எழுந்து அமர்கிறார். உயிர்ப் பெற்றெழுந்த இளைஞனை அவனுடைய தாயிடம் ஒப்படைக்கின்றார். ஆண்டவன் ஆலயத்தை கள்வரின்; குகையாக மாற்றிய வியாபாரிகள் மீது கோபம் கொண்டு சாட்டையால் அடித்து விரட்டிவிட்டு தன் தந்தையின் இல்லத்தை வாணிபக் கூடாரமாக மாற்றாதீர்கள் என்று எச்சரித்தார் இளைஞன் இயேசு (யோவா 2:13-22). இயேசு தொழுகைக் கூடத் தலைவனைப் பார்த்து “அஞ்சாதீர் நம்பிக்கையோடு மட்டும் இரும் அவள் பிழைப்பாள்” என்று சொல்லிவிட்டு அவர் வீட்டிற்குச் சென்று சிறுமியின் கையைப் பிடித்து “சிறுமியே, எழுந்திரு!” என்று கூறி இறந்தவளை உயிர் பெறச் செய்தார் (லூக் 8:49-56). இளைஞன் இயேசு இறந்தவர்களையே ஆற்றல்படுத்தி உயிர் வாழச் செய்தார். அத்தகைய வல்லமை சக்தி அவருக்கு எங்கிருந்து வந்தது என்று சிந்திக்கின்றபோது, அவர் சமூகத்தின் மீது கொண்டிருந்த அன்பு என்பதை உணர முடிகிறது.. எனவேதான் சொன்னார் “நான் உங்களை அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும்” (யோவா 15:17). அன்பு சமூகமாக வாழ இளையோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆக இயேசு இளையோர் இறையாட்சிக்காக தன்னையே செபத்தின் வழியாக ஆற்றல்படுத்தினார். செயலின் வழியாகச் சீடர்களை ஆற்றல்படுத்தினார். திருச்சபை வழியாக இளைஞர்களை ஆற்றல்படுத்தினார்.

இத்தகைய பின்னணியில் ‘இறையாட்சிக்காய் இளையோர்’ என்ற நூலை எழுதியிருக்கிறார் பேரருள்திரு. முனைவர் அ. ஜோசப் லூர்து ராஜா, முதன்மைக் குரு, சிவகங்கை மறைமாவட்டம். இளையோரை இறையாட்சிக்காக இயக்க வேண்டும் என்பதை முதல் அதிகாரத்தில் விளக்கியுள்ளார். இன்றைய இளையோரின்; எதார்த்த நிலை என்பது எப்படி உள்ளது என்பதை அதை ஆக்கமிகு சக்தியாக மாற்றுவதற்கு இளையோர் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இரண்டாம் அதிகாரத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். இறையாட்சிக்காய் வாழ இளையோர் ஆற்றல்மிகு ஆன்மீகத்தை கொண்டிருக்க வேண்டும் என மூன்றாம் அதிகாரத்திலும் எத்தகைய வழிமுறைகளை கடைப்பிடித்தால் இளையோரை ஆற்றல்படுத்த முடியும் என்பதற்கு பல்வேறு உத்திகளையும் வழிமுறைகளையும் நான்காம் அதிகாரத்திலும் விளக்க முயற்சித்திருக்கிறார். இத்தகைய நூலை எழுதிய ஆசிரியர் அனைத்து காரியங்களையும் இறுதி இரண்டு அதிகாரத்தில் கவிதை வடிவில் எடுத்து இயம்பியுள்ளார்.

இளையோர் ஆனமீகத்தில் வளர, இளையோரை இறையாட்சிக்காக ஆற்றல்படுத்த இந்நூல் பெரிதும் உதவியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே இந்நூலை எழுதிய பேரருள்திரு. முனைவர். அ. ஜோசப் லூர்து ராஜா அவர்களை வாழ்த்துகிறேன். அவர் எழுத்துப் பணி தொடர சேர்ந்து செபிக்கிறேன். ஒவ்வொருவரும் இதை வாங்கி படித்து தன்வயப்படுத்தி இறையாட்சிக்காய் இளையோராய் மாறிட அழைக்கின்றேன்.